சமீப நாட்களாக பிரபல பள்ளி மற்றும் கல்லூரிகள், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் சாலையில் உள்ள இந்தியன் பப்ளிக் ஸ்கூல், சமது மேல்நிலைப்பள்ளி, கே.கே. நகரில் உள்ள ஆச்சார்யா ஸ்கூல், புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, ஹோலி கிராஸ் கல்லூரி, புனித வளனார் கல்லூரி விமான நிலையம், மற்றும் நான்கு தனியார் ஹோட்டல் களுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதேபோல நேற்று இ.பி.ரோட்டில் உள்ள ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி, சந்தானம் வித்யாலயா பள்ளிக்கு தபால் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தன.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டன. ஆனால், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் உடனடியாக பள்ளிக்கு வர இயலவில்லை. அதன்பிறகு, இரவு 8.30 மணிக்கு வெடிகுண்டுகளை கண்டறியும் பிரிவு போலீசார் பள்ளிக்கு வந்து அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில் இன்று(23-10-2024) பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு காலை முதல் மீண்டும் திருச்சி மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.