இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தீவிரவாதிகளின் சதி திட்டங்களை தடுப்பதற்காகவும், பாதுகாப்பு கருதி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அஜய்குமார், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தது மட்டுமல்லாமல் ரயில் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இதேபோன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திலும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பஞ்சப்பூர் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தமிழ்நாடு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments are closed.