Rock Fort Times
Online News

கரூர் சம்பவத்தை வைத்து யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பாஜக… முதல்வர் மு.க.ஸ்டாலின் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.738 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழகம், தமிழர்கள் என்றாலே ஏன் மத்திய அரசுக்கு கசக்கிறது? தமிழகம் மீது அவர்களுக்கு இருக்கும் வன்மத்தை எப்படி எல்லாம் காட்டுகிறார்கள் என்று நான் சொல்லி தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜிஎஸ்டியால் நிதி உரிமை போய்விட்டது. நிதிப்பகிர்விலும் ஓரவஞ்சனை, சிறப்பு திட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்கள். பள்ளி கல்விக்கான நிதியை தரமாட்டார்கள். பிரதமரின் பெயரில் இருக்கும் மத்திய அரசு திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும். இது எல்லாம் போதாது என்று நீட், தேசிய கல்விக் கொள்கை என கல்வி வளர்ச்சிக்கும் தடை, கீழடி அறிக்கைக்கு தடை, எல்லாவற்றிக்கும் மேலாக தொகுதி மறுவரையறை, இப்படி தமிழகத்திற்கு வஞ்சகம் செய்வதையே மத்திய பாஜ அரசு வழக்கமாக செய்து கொண்டு இருக்கிறது. மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துக்கள், கும்பமேளா பலிகளுக்கு எல்லாம் உடனே விசாரணை குழு அனுப்பாத பாஜ., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள். இதற்கு தமிழகத்தின் மீது உள்ள அக்கறை காரணம் அல்ல, இங்கேதான் நீங்கள் கவனிக்க வேண்டும். அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா? இதனை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா, என்று பார்க்கிறார்கள். மாநில நலனை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னமும் சொல்ல வேண்டும் என்றால் மாநிலமே இருக்க கூடாது என நினைக்கும் மத்திய பாஜ அரசுடன் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் கூட்டணி வைத்து கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்த தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள். பாஜவை, அதிமுக ஆதரிப்பதற்கு கொள்கை அடிப்படை இருக்கிறதா? தவறு செய்தவர்கள் அடைக்கலம் ஆகி தப்பிப்பதற்கான வாஷிங்மிஷின் தான் பாஜ. அந்த வாஷிங் மிஷினில் உத்தமர் ஆகி விடலாம் என குதித்து இருக்கிறார் பழனிசாமி. அவருக்கு கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று ஆட்கள் சேர்க்கும் அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறார்கள். தமிழக மக்கள் நலன் மீது அக்கறை உள்ள யாரும் பாஜ உடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள். 3வது முறையாக மக்கள் ஆதரவு குறைந்த உடன், ஒரு சிலர் ஆதரவுடன் ஆட்சி அமைத்து ஆர்எஸ்எஸ் பாதையில் பாஜ அரசு நடைபோட ஆரம்பித்து இருக்கிறது. திமுக ஆட்சி தான் அடுத்து வரும் தேர்தலிலும் வென்று தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்