Rock Fort Times
Online News

பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் இனி வாட்ஸ்அப்பில்… தமிழக அரசின் புதிய டிஜிட்டல் சேவை!

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, புதிய டிஜிட்டல் முயற்சியாக, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை தொடங்கியுள்ளது. இதுவரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அரசு சேவைகளை விரைந்து வழங்கவும், தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் முதன்முறையாக வாட்ஸ்அப் வழியாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட மொத்தம் 50 அரசு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில், வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம் என, மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மக்களுக்கு அரசு சேவைகள் இனி வாட்ஸ்அப்பில் மிக எளிதாக கிடைக்கும். காலதாமதமின்றி விரைவாக சான்றிதழ்கள் வழங்கப்படுவதுதான் இந்த சேவையின் முக்கிய நோக்கம். சான்றிதழ் பெற தேவையான ஆவணங்களை வாட்ஸ்அப் வழியாக பதிவேற்றம் செய்யலாம். பொதுமக்கள் குறுஞ்செய்தி அனுப்பிய சில நாட்களிலேயே சான்றிதழ்கள் வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்