மண்ணச்சநல்லூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மேலும் ஒரு மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள நேரு நகரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துச்சென்றனர்.இதே பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் மண்ணச்சநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் மகன் சதீஷ்குமார் (வயது 32) என்பவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று மண்ணச்சநல்லூர் இந்திரா நகரச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் ராஜதுரை வயது 38 என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி நடத்தினார் .மேலும் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரித்துச் செல்லும் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகி்றார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.