Rock Fort Times
Online News

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.241 கோடி செலவில் மிதிவண்டிகள்…! தொடங்கி வைத்தார், துணை முதல்வர் உதயநிதி!

தமிழ்நாடு முழுவதும் 2025- 2026 ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 5,34,017 மாணவ, மாணவியருக்கு 241 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 1,448 மாணவ, மாணவியருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(14-11-2025) மிதிவண்டிகளை வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்-அமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வர உதவியாக, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிரிவைச் சார்ந்த அனைத்து மாணவ, மாணவியருக்கும், எவ்வித வருமான உச்சவரம்பின்றி ஆண்டுதோறும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,092 கோடி ரூபாய் செலவில் 22 லட்சம் மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 2025- 2026 ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் 2,38,967 மாணவர்கள் மற்றும் 2,95,050 மாணவியர் என மொத்தம் 5,34,017 மாணவ, மாணவியருக்கு 241 கோடி ரூபாய் செலவில் மிதி வண்டிடிகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 4,938 மாணவர்கள் மற்றும் 6,511 மாணவியர் என மொத்தம் 11,449 மாணவ, மாணவியர்களுக்கு 5.18 கோடி ரூபாய் செலவில், மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர், குழந்தைகள் தினமான இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு, அரசு நிதி உதவி மற்றும் பகுதியாக நிதி உதவி பெறும் 8 பள்ளிகளைச் சேர்ந்த 576 மாணவர்கள் மற்றும் 872 மாணவிகள் என மொத்தம் 1448 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கி, தமிழ்நாடு முழுவதும் 2025- 2026 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் 5,34,017 மாணவ, மாணவியருக்கு 241 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும், கல்விப் பணியில் முன்னேற்றம் காணவும், பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையினை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திலுள்ள 3 சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்து மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2024-25 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 114 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு துணை முதல்-அமைச்சர் கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்