Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம், சமயபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட 12 முக்கிய கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை…!

ஸ்ரீரங்கம் ,சமயபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தில் முக்கியமான 12 கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள்,  பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து 2018-ல் அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் பேப்பர் கப், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கப், அனைத்து அளவு மற்றும் தடிமனான பிளாஸ்டிக் கேரி பேக் உட்பட 9 பொருட்களுக்கு தடை விதித்தது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், திருத்தணி முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோவில் ஆகிய 12 கோவில்கள் பிளாஸ்டிக் இல்லா கோவில்களாக மாற்றிடும் வகையில், இக்கோவில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இக்கோவில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடையை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்