ஆதார் அட்டையில் திருத்தம் செய்து போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்த திருச்சியைச் சேர்ந்த “பலே ஆசாமி” சிக்கினார்…!
போலி ஆவணங்கள் மூலம் பல பேருக்கு பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்ததாக திருச்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- போலி ஆவணங்கள் மூலம் ஒரு கும்பல் பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்து வருவதாக சென்னை விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள போலி பாஸ்போர்ட் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி, அப்பிரிவு உதவி ஆய்வாளர் எமர்சன் வித்தாலிஸ் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக இந்த மோசடி வழக்கில் ஹமீது முஸ்தபா (47), ஹாஜா ஷெரிப், வள்ளல் இப்ராஹிம் ஷா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு மூளையாக, ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாற்றம் செய்து அதன் அடிப்படையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்க உதவியதாக திருச்சியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (44) என்பவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், திருச்சியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 50 பேருக்கு ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றி பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Comments are closed.