Rock Fort Times
Online News

ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 26-09-20025 (வெள்ளிக்கிழமை) 27-09-2025 (சனி) 28-09-2025 (ஞாயிறு) வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு 29 மற்றும் 30ம் தேதிகளில் சென்னையிலிருத்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு இன்று (26-09-2025) 790 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோன்று, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை (27-09-2025) 565 பேருந்துகளும், 29-09-2025 அன்று 190 பேருந்துகளும், 30-09-2025 அன்று 885 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு இன்றும் (26-09-2025), நாளையும் (27-09-2025) 215 பேருந்துகள், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 185 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோன்று, விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பணியிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக, அக்டோபர் 4 மற்றும் 5 ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.irstch மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்