தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக திருச்சி ஏர்போட்டில் தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.அதன்படி இன்று ( பிப்ரவரி -28 ) வளைகுடா நாடான சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில், மின்னணு சாதனங்களுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட சுமார் ஒரு கோடி 22 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது., வளைகுடா நாடுகளில் ஒன்றான சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வழக்கமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினோம். இதில் பயணி ஒருவர் கொண்டு வந்த ஐஸ் க்ரஸ்ஸருக்குள் மர்ம பொருள் இருந்தது ஸ்கேனர் மூலம் கண்டறியப்பட்டது. அதை பிரித்து பார்த்தபோது உள்ளே உதிரி பாகங்களுக்கு பதிலாக, சுமார் ஒன்றரை கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் சந்தை மதிப்பு ரூபாய் ஒரு கோடியே 22 லட்சத்து 76 ஆயிரம் ஆகும். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்ததோடு கடத்திவந்த நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
Comments are closed.