நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காளதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும். இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர் ஆலோசனை நடத்தி அணியை தேர்வு செய்தனர். தேர்வு கூட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கொண்டார். இந்திய அணி வீரர்கள் வருமாறு:-
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) , கில் (துணை கேப்டன் ), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா , ஹர்திக் பாண்டியா , ஷிவம் துபே, அக்சர் படேல் , ஜிதேஷ் சர்மா , பும்ரா, அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, குல்தீப், சஞ்சு சாம்சன் , ஹர்ஷித் ராணா, ரிங்குசிங். முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Comments are closed.