Rock Fort Times
Online News

அதவத்தூர் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததால் தள்ளுமுள்ளு… ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. மேலும் 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. அந்தவகையில் திருச்சி மாநகராட்சியோடு அதவத்தூர் ஊராட்சி, மணிகண்டம் ஊராட்சி, குமார வயலூர், நொச்சியம், தாளக்குடி, குண்டூர், கூத்தூர், வாளாடி, கீரமங்கலம் 2 உள்ளிட்ட 22 ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க உள்ளனர். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அதவத்தூர் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று கிராம சபை கூட்டங்களை புறக்கணித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டமும் நடத்தியுள்ளனர். இந்தநிலையில் அதவத்தூர் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று(06-01-2025) ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வீடு முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வயலூர் சாலை எம்ஜிஆர் சிலை அருகே 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தாங்கள் ஊராட்சி மாநகராட்சியோடு இணைக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது வேனில் இருந்து சிலர் கீழே இறங்கியதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், காலையிலேயே 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த சாலை மறியலால் பள்ளி கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வயலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க இன்னும் 165 நாட்கள் அவகாசம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளியுங்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் சில ஊராட்சிகளை மாநகராட்சி யோடு இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் தற்போது இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் மாபா சின்னத்துரை, பழனிஆண்டி எம்எல்ஏ வீட்டு முன்பு உண்ணா நிலை போராட்டம் அறிவித்திருந்த நிலையில் அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். மாநகராட்சியோடு தங்கள் ஊராட்சியை இணைக்கக் கூடாது இணைத்தால் வரி அதிகமாகும் 100 நாள் வேலை பறிபோகும் தங்கள் கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறோம். வரி உயர்ந்தால் எப்படி விவசாயம் செய்வது இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரையிலும் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே கலந்து கொள்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட லட்சுமணன் என்பவர் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்