Rock Fort Times
Online News

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி…!

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில், 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி இன்று (20-02-2024) நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கா.ச. ஜீவானந்தன் வரவேற்று பேசினார். திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அ.ஜோசப் அந்தோணி தலைமை வகித்து பேசுகையில், செயற்கை நுண்ணறிவு பற்றி இளம் வயதில் கற்றுக் கொள்வதால், வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும். மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு பயிற்சி கணினி வாயிலாக அளிக்கப்படும். இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

 

திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் ப. அர்ஜுன் முன்னிலை வகித்து பேசுகையில், எதிர்கால திட்டமிடலுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி உதவுகிறது. பில்கேட்ஸ் தனது மாணவ பருவத்தில் மேற்கொண்டு கற்று கொண்ட முயற்சியே இன்று அவர் வளர்ச்சியடைய முக்கிய காரணம். ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக நாம் ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள கூட உதவுகிறது என்றார். ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி ஆராய்ச்சி அறிஞர் மற்றும் கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த எஸ் ஹரிஷ் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் மனிதனுக்கும், இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்க திறன் ஆகும். இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது.கணினி அறிவியலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது. பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது. இச் செயற்கை நுண்ணறிவு திட்டமிடல், சிந்தித்தல், எண்ணங்களை கற்றுக் கொள்ளுதல் என பல்வேறு நுண்ணறிவு திறன்களை உள்ளடக்கியுள்ளது. நுண்ணறிவுப் பயன்பாடுகளில் மேம்பட்ட வலைத் தேடுபொறிகள் ( எடுத்துக்காட்டு கூகுள் தேடல்) பரிந்துரை அமைப்புகள், (யூடியூப், அமேசான், நெட்பிளிக்சு) மனித பேச்சைப் புரிந்துகொள்வது (சிரி, அலெக்சா போன்றவை), தானோட்டிச் சீருந்துகள் ( எடுத்துக்காட்டு: வேமோ குழும ஊர்திகள்), பொது அறிதிறன் உருவாக்கும் ஆக்கக் கருவிகள் (அரட்டைGPT, செயற்கை அறிதிறன் கலை), உயர்நிலை ஆட்ட நுட்ப விளையாட்டுகளில் போட்டியிடல்(சதுரங்கம், Go) போன்றவை உள்ளடங்கும். செயற்கை நுண்ணறிவு 1956ம் ஆண்டில் ஒரு கல்வித் துறையாக டார்த்மவுத்து பணிப்பட்டறையில் நிறுவப்பட்டது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியின் பல்வேறு துணைத் துறைகளையும், குறிப்பிட்ட குறிக்கோள்களையும், குறிப்பிட்ட கருவிகளின் பயன்பாட்டையும் மையமாகக் கொண்டுள்ளன என கூறினார். பிக்லேர்ன் ஏ.ஐ. இன்ஜினியர் கே.முத்துக்கருப்பன், நுண்ணறிவு முக்கியத்துவம் பற்றியும், செயற்கை நுண்ணறிவு செயலி பற்றியும் விளக்கி கூறினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (ஓய்வு) எஸ்.சிவகுமார், மாணவர்களுக்கு கைபேசி மூலம் செயற்கை நுண்ண றிவை பயன்படுத்தி வினா-விடை தயாரித்தல், கதை உருவாக்குதல், படம் வரைதல், நாடகம் உருவாக்குதல், ஆங்கிலத்தில் பேசுதல் குறித்து பயிற்சி அளித்தார். முடிவில், ஆசிரியை தி.சரண்யா நன்றி கூறினார். இதில், பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்