Rock Fort Times
Online News

வீடுகளில் மின் கட்டணம் எகிறுகிறதா?- கணக்கெடுப்பில் வருகிறது புதிய நடை முறை…!

வீடுகளில் அதிக மின் கட்டணம் வருவதை தடுக்க மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதில், புதிய முறையை அமல்படுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது மின் பயன்பாடு கணக்கெடுத்த விபரம் கணினியில் பதிவேற்றப்பட்டதும், சம்பந்தப்பட்ட நுகர்வோரின் மின் இணைப்பு கணக்கில் பதிவாகி விடுகிறது. தவறாக கணக்கெடுத்து இருந்தாலும், பதிவான தொகையை செலுத்தியே ஆக வேண்டும். அதற்கு பிறகுதான், தவறாக கணக்கு எடுக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கலாம். பின், மீட்டரை ஆய்வு செய்து, தவறாக கணக்கு எடுத்திருப்பது உறுதியானால் கூடுதல் தொகை அடுத்த மின் பயன்பாட்டில் ஈடுசெய்யப்படும். இதனால், நுகர்வோர் பாதிக்கப்படுவதுடன், மின் வாரியத்திற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, இனி குறைந்த மின் பயன்பாடு உள்ள வீடுகளில் திடீரென அபரிமிதமாக கட்டணம் அதிகரிக்கும் பட்சத்தில் வழக்கமாக 1,000 முதல் 1,500 ரூபாய் கட்டணம் வந்த வீட்டிற்கு, 10,000 ரூபாய் என்று கணக்கெடுத்திருந்தால் கணினி அதை பதிவு செய்யாது. பின், அபரிமிதமாக கட்டணம் வந்த வீட்டின் மீட்டரில் வணிக ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு பின், எந்த கட்டணம் சரியானதோ அதுவே, நுகர்வோர் கணக்கில் பதிவு செய்யப்படும். இதனால், மின் பயன்பாடு குறைவாக உள்ள வீடுகளில், திடீரென பல ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் என ‘பில்’ வருவது ஆரம்பத்திலேயே தடுக்கப்படும். இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்