Rock Fort Times
Online News

திருச்சியில் பேருந்து நிலையம் கட்டாத அதிமுகவினர் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை குறை கூறுவதா?- அமைச்சர் கே.என்.நேரு காட்டம்…!

திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஓரணியில் தமிழ்நாடு” என்கிற உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். இதுதொடர்பாக நாளை( ஜூலை 2) உறையூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் முதல் உறுப்பினர் சேர்க்கை தொடங்கும். 30 சதவீத உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர். புதிய உறுப்பினர் சேர்க்கை மூலமாக அந்த எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகமாகும். யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்க மாட்டோம். உறுப்பினர் சேர்க்கையின் மூலமாக வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம். திமுக அரசு செய்த சாதனைகள், மத்திய அரசு எந்தெந்த வகையில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளது என்பது குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வோம். தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை தான் பின்பற்றி வருகிறது. மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து உள்ளார்கள். திருபுவனம் காவல் நிலைய இளைஞர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் அவர் முதல்வராக இருந்த போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறினார். இளைஞர் மரண விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் யார் சம்பந்தப்பட்ட இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது. திமுக கூட்டணி மட்டும் தான் உறுதியாக உள்ளது.
திமுகவிற்கு யார் விருப்பப்பட்டு வந்தாலும் அவர்களை சேர்த்து கொள்வோம். திமுக வில் உட்கட்சி பிரச்சனை அண்ணன்- தம்பி பிரச்சினை தான்.அதை பேசி தீர்த்துக் கொள்வோம். தேர்தலுக்கு பத்து மாதங்களுக்கு முன்பாகவே மக்களை சந்திக்க செல்கிறோம். மக்களிடம் நாங்கள் செய்த திட்டங்கள், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக வினர் செய்யாதது உள்ளிட்டவற்றை எடுத்து கூறுவோம். திருச்சியில் பேருந்து நிலையம் கட்டாத அதிமுகவினர் பஞ்சப்பூர் பேருந்து
நிலையத்தை குறை கூறி போராட்டம் நடத்த உள்ளார்கள். எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்தும் திமுக தலைவரும், கூட்டணி கட்சி தலைவர்களும் இணைந்து முடிவெடுப்பார்கள். திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்கும் எண்ணம் தற்போது இல்லை. அதே நேரத்தில் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறினார். பேட்டியின்போது திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்