Rock Fort Times
Online News

அரக்கோணம் பாலியல் சம்பவம்: திமுக நிர்வாகி மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்- இபிஎஸ்…!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றியதாகவும் கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக தெய்வச்செயல் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அரக்கோணம் மகளிர் காவல் நிலையப் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “21 வயது கல்லூரி மாணவி, கடந்த 9-5-2025 அன்று ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்திலும், 16-5-2025 அன்று அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் மனுக்களை அளித்திருக்கிறார். திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல், கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக “சார்”களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவியிடம் மாணவி முறையிட்ட பிறகே எப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது. மேலும், தன்னைப் போன்றே “20 வயதுள்ள 20 பெண்கள்” தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். “பொள்ளாச்சி பொள்ளாச்சி” என்று மேடைதோறும் கூவிய முதல்வர் ஸ்டாலின் “உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி” தானே?பொள்ளாச்சி வழக்கிற்கும், இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக சிபிஐ-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட பெண், தெளிவாக அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். குறிப்பாக, அந்த அமைச்சரின் உதவியாளருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன். திமுக குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்