திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 365 கிலோ தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் பணி…! ( வீடியோ இணைப்பு)
தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை 2021-2022 மானிய கோரிக்கையின் போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற நகைகளை, தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய நகைகளை மும்பையில் உள்ள அரசுக்குச் சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோவிலுக்கு மேலும் வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் செலுத்தப்பட்ட 365 கிலோ தங்க நகைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் கோவில் உபயோகத்திற்கு தேவையில்லாத மற்றும் அரக்கு, அழுக்கு போன்றவற்றை நீக்கி நிகர தங்க நகைகளை தரம் பிரித்து எடை போடும் பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராஜு தலைமையில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரபாபு, மாலா முன்னிலையில் மூன்று மண்டல செயல் அலுவலர்கள், சமயபுரம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் மேற்பார்வையில் 25-க்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஆணை கிடைத்தவுடன், நகைகள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கி மூலம், மும்பை அரசு உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதற்கான தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி, கோவிலுக்கு வழங்கும். இதிலிருந்து கிடைக்கும் வட்டி, கோவில் வருவாயில் சேர்க்கப்படும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராஜூ தெரிவித்தார். தங்கம் எடை போடும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Comments are closed.