Rock Fort Times
Online News

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ரூ.2 லட்சம்  சிக்கியது…

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பொதுப்பணி துணை வளாக கட்டிடத்தில் நீர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று ( 05.07.2023 ) இரவு  திடீரென அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நீர்வளதுறையின் கீழ் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு ஒன்றும் தனியாக செயல்பட்டு வருகிறது. அங்கு உதவி செயற்பொறியாளராக உள்ள பாஸ்கரன் அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில், அவரது அறையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் எண்ணி பார்த்தபோது அதில் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 540  இருந்தது தெரியவந்தது. அந்த பணத்துக்கு  பாஸ்கரனிடம் போலீசார் கணக்கு கேட்டனர். ஆனால் அவர் உரிய கணக்கு காட்டாததால் ரூ.2¼ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நீர் மேலாண்மை துறையின் கீழ் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை புதுப்பித்து கொடுப்பதற்காக அவர்களிடமிருந்து பெறப்பட்ட லஞ்ச பணமாக இது இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பணத்தை  யார்-யார் கொடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எழிலகம் வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு விடிய விடிய சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் எழிலகம் வளாகத்தில் பரபரப்பு நிலவியது

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்