சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது. இதில் பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன. 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும். ஏற்கனவே, இந்தியாவின் சந்திரயான்-3 ராக்கெட் நிலவில் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது

Comments are closed, but trackbacks and pingbacks are open.