அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த தமிழக கவர்னர்?…
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். பொதுவாக துணைவேந்தர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி, அவருடைய பதவி காலம் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் நிறைவு பெற்றது. துணைவேந்தராக அவருடைய பதவி காலம் முடிவடைந்து இருந்தாலும், பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் துறையில் பேராசிரியராக பணியை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் பேராசிரியர் பணியில் கடந்த ஜூலை 31-ந்தேதியுடன் வேல்ராஜ் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அதேநாளில் அவரை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்தது அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுத்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகவும், அந்த முறைகேட்டில் அப்போது துணைவேந்தராக இருந்த வேல்ராஜூவுக்கும் தொடர்பு இருந்ததாகவும், துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியபோது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு வேல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்து இருந்த உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது ரத்து செய்து இருப்பதாக பல்கலைக்கழக வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
Comments are closed.