சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், அதே வளாகத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி அளித்த புகாரை அடுத்து, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரன்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் திமுக முக்கிய நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதாகவும் “அந்த சார்” யார் என்பதை கண்டறிய வேண்டும் என அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில்
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஞானசேகரனுக்கு எதிராக, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 70க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களை கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தது. பின்னர் இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு, கடந்த மார்ச் 7ல் மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள், கடந்த 23ல் நிறைவு பெற்றதை அடுத்து, கடந்த மே 28ம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இன்று (ஜூன் 02) தண்டனை விபரங்களை நீதிமன்றம் அறிவித்தது. தி.மு.க., அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.’குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்க கூடாது” என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை நாட்கள் சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
*

Comments are closed.