திருச்சி மேற்கு மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் எல்கேஎஸ் திருமண மண்டபத்தில்
இன்று (02-09-2024) நடைபெற்றது. மாநகர கழக செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரப்போகிற சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?, மீண்டும் நாம் ஆட்சி அமைப்பதற்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும். வாக்காளர்களை அணுகுவது எப்படி? என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வார்டு செயலாளர்களுக்கு பேச அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் வரிசையாக வந்து தங்களது குறைகளை, கோரிக்கைகளை தெரிவித்தனர். அவர்களில் 27-வது வார்டு செயலாளர் காளை கூட்டத்தில் பூகம்பத்தையே ஏற்படுத்தி விட்டார். அவர் தனது ஆதங்கத்தை நிர்வாகிகள் மத்தியில் கொட்டி தீர்த்து விட்டார். அவர் பேசுகையில், தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பெறுவதற்கு மட்டுமே அடிமட்ட தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். இங்கு முக்கிய பொறுப்பு வகிக்கக்கூடிய யாராலும் 10 வாக்குகள் கூட வாங்கி கொடுக்க முடியாது. வட்டம், பகுதி, கிளை என்று அடிமட்ட
தொண்டன் தான் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற செய்கிறான். கழகத் தலைவர் திருச்சி வரும்போது 65 வட்ட கழக செயலாளர்களை அழைத்துச் சென்று அவர்களது பெயர்களை கூறி அவருடன் புகைப்படம் எடுப்பதற்கு கூட இங்கு இருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர், மாநகர செயலாளர் தயாராக இல்லை. அமைச்சருக்கு அருகில் நிற்பதற்கு கூட அனுமதிப்பதில்லை. ஆனால், வாக்கு என்று வரும்போது மட்டும் நாங்கள் தேவைப்படுகிறோம். எத்தனையோ முறை தலைவர் திருச்சிக்கு வருகை தந்திருக்கிறார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட அதற்கான முயற்சியை மாவட்டச் செயலாளர்கள் எடுத்ததில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட மாநகர செயலாளர் அன்பழகன், அடுத்த முறை தலைவர் திருச்சி வரும்போது நிச்சயம் செய்கிறோம் என்று கூறினார். ஆனால் நீங்கள் ஒருபோதும் இதை செய்ய மாட்டீர்கள் என்று காளை உடனடியாக பதில் அளித்தார்.
தொடர்ந்து, இங்கு அமர்ந்திருக்கும் காஜாமலை விஜய் கூட்டம் போட்டு பேசுகையில், மற்ற வார்டுகளை காட்டிலும் நம்முடைய வார்டில் அதிகமான வாக்குகள் பெற வேண்டும், அதிக வாக்குகளை பெற்று விட்டால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அந்த வேலையை உடனடியாக செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார். ஆனால், இன்று வரை அவர் எந்த வேலையையும் எதையும் எங்களுக்காக செய்யவில்லை. இப்போது கேட்டாலும் தலைமை தனக்கே எதுவும் செய்யவில்லை என்று கூறி நம்முடைய வாயை அடைத்து விடுவார். நான் இப்போது பேச வேண்டிய அனைத்தையும் அமைச்சர் நேரு வந்த பிறகு பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் என்னை மேடையில் ஏற்றி விட்டனர். கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால் என்னுடைய அண்ணன் மகனுக்கு சுகாதாரத் துறையில் பணி வழங்குவதாக கூறியிருந்தார்கள். அவர்கள் வெற்றி பெற்று 3 ஆண்டுகளும் கடந்து விட்டது. ஆனால், இன்று வரை அவர்கள் சொன்ன வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என்று கூறினார். அவர் இவ்வாறு பேசும்போது திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்தவர்கள் பலத்த கரகோஷத்தை எழுப்பினர். அவருடைய இந்த பேச்சால் முக்கிய பொறுப்புகளில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Comments are closed.