Rock Fort Times
Online News

மர்மமான முறையில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முயற்சி – போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு….

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த வாளசிராமணி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 11 வயது மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும், இவருக்கு மனநிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கீதா தனது இளைய மகளுடன் புத்தனாம்பட்டியில் வசித்து வருகிறார். மேலும், அப்பகுதியில் சத்துணவு உதவியாளராகவும் பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகள் தாத்தா, பாட்டியுடன் உள்ளார்.

மது அருந்தும் பழக்கம் உள்ள கணேசன் நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டு கதவில் மோதியதில் முகம், தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையடுத்து அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதுகுறித்த தகவலின்பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீ.வருண்குமார் ஐபிஎஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அதனைதொடர்ந்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணேசன் எப்படி இறந்தார்?, அவர் தலை கதவில் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்