
பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா இன்று ( 26.10.2023 ) நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் 1200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பராமரிப்பு பணிகள் காரணமாக ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என்று ஏற்கனவே மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

கலை விழா நடைபெறும் பள்ளி பகுதியிலும் மின்சாரம் கிடையாது. ஆகவே, கரண்ட் இல்லாமல் இந்த கலைத் திருவிழா நடைபெறுகிறது. மேலும், முன்கூட்டியே குடிநீர் வசதி செய்யப்படாமல் அவசர அவசரமாக இன்று தான் செய்யப்பட்டது. மேலும், மாணவ மாணவிகளை அழைத்து வரும் ஆசிரியர்களுக்கு அமர கூட இடமில்லாமல் அரங்கிற்க்கு வெளியே நிற்க வேண்டிய அவலநிலை நிலவி வருகிறது. மேலும் பல மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோா்களுடன் பள்ளி வளாகத்தில் அமா்ந்திருந்தனா். இத்தனைக்கும் மாவட்ட கல்வி அலுவலர் உள்பட பலர், இந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக பெற்றோர்கள் சிலர் கூறுகையில், ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்குபெறும் ஒரு கலை நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டாமா?, கரண்ட் இருக்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கல்வியாளர்கள் எப்படி ஏற்பாடு செய்தார்கள் என்று தெரியவில்லை. குடிநீர் வசதி முறையாக செய்யப்படவில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அமர நாற்காலி வசதியும் இல்லை. ஏதோ பெயர் அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இனியாவது முன்கூட்டியே விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.