திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் ஏசுராஜ் என்பவருக்கு சொந்தமான தோல் மற்றும் அட்டைப் பெட்டிகளை சேமிக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது, இந்த நிலையில் சேமிப்பு கிடங்கில் இருந்து இன்று காலை திடீரென புகை வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் பத்திற்க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தனியார் டேங்கர் லாரிகள், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் சேமிப்பு கிடங்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 சக்கர வாகனமும், மேலும் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகள், துண்டு தோள்கள் உட்பட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் முற்றிலுமாக எரிந்து சேதமானது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு துறையினர் சாதுரியமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர்த்தப்பினா்.