துறையூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்குள் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல்: அதிமுகவினர் 10 பேர் மீது வழக்கு…!
ஆட்சியாளர்களிடம் இருந்து “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 23-ம் தேதி முதல் 25ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 24) துறையூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசும் இடமான துறையூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகளவு கூடி இருந்தது. எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சற்று முன்பாக கூட்டத்திற்குள் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸ் பிரசவ வலியால் துடித்த ஒரு கர்ப்பிணியை ஏற்றி சென்றதாக சொல்லப்படுகிறது. உடனே அந்த ஆம்புலன்ஸை அதிமுக நிர்வாகிகள் சுற்றி வளைத்து அதன் ஓட்டுநரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார், அதிமுக துறையூர் நகரச் செயலாளர் அமைதி பாலு, துறையூர் நகர மன்ற உறுப்பினர் தீனதயாளன், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் காமராஜ், வினோத் என்கின்ற விவேக் உட்பட 10 பேர் மீது பொது சொத்தை சேதப்படுத்தியது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கர்ப்பிணிப் பெண் உதவியாளரை தாக்கியது உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இதே போல ஒரு ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் புகுந்தது. ஆனால் அதில் நோயாளிகள் யாரும் இல்லை என்பதை அறிந்ததும் எடப்பாடி பழனிசாமி அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எச்சரித்ததோடு அடுத்த முறை இந்த மாதிரி நோயாளி இல்லாமல் வந்தால் அந்த ஆம்புலன்ஸில் ஓட்டுநர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று எச்சரிக்கை செய்தது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.