தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புதிதாக கட்சித் தொடங்கி முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கட்சித் தொடங்கிய போது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்த விஜய்யுடன், தற்போது வரை எந்தவித முக்கியமான கட்சியும் கூட்டணியில் இணையவில்லை. இதற்கிடையில், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை, ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் பிரச்சனை போன்ற பிரச்சனைகளால் விஜய் கடும் நெருக்கடியில் உள்ளார். இதற்கிடையில் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து கூட்டணியில் இணைக்க பா.ஜ.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது குறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுடன் இன்று( மார்ச் 13) ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 132 மாவட்டச் செயலாளர்களில் 120 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 90க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடலாம் என்றும், மீதமுள்ள மாவட்டச் செயலாளர்கள் தனித்து போட்டியிடலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய், வருகிற 15ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், நாளை (மார்ச் 14) விஜய் டெல்லி செல்லவுள்ளார். இந்த சூழ்நிலையில், இன்று இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பதை கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்வார் என்று சொல்லப்படுகிறது.

Comments are closed.