சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்க உதவியதாக குற்றச்சாட்டு: கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்…!
ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது. அது மட்டும்இன்றி பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி, சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரபல நடிகர்களான பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு ஈடாக பெரும் அளவிலான கமிஷன் தொகை பிரபலங்கள் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐதராபாத் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து இருந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபலங்களின் வங்கி பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகின்றது. அதனடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது கூகுள், மெட்டா உள்ளிட்ட டெக் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்க உதவியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.