உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு: டி.எஸ்.பி. சுந்தரேசன் விவகாரத்தில் திடீர் திருப்பம்-தலைமை காவலர் “சஸ்பெண்ட்”…!
மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் சுந்தரேசன். இவருடைய அலுவலக வாகனம் பறிக்கப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. இதனால், அவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றதாக வீடியோவும் ஊடகங்களில் வெளியானது. மேலும், அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன் ஆகிய உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் அழுத்தம் தருவதாகவும், அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்வதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், தஞ்சாவூர் டி.ஐ.ஜி.ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். சீருடை பணியாளர் விதிகளை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, சுந்தரேசனை ‘சஸ்பெண்ட்’ செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்தசூழலில், டி.எஸ்.பி., சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்தை, உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் பொதுவெளியில் வெளியிட்டதாக கூறி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றும் சரவணன் பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
Comments are closed.