Rock Fort Times
Online News

சபாநாயகரை நீக்கக்கோரி அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி- எதிர்ப்பு-154, ஆதரவு- 63

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்தார். தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று (மார்ச் 17)அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து ஆதரவு தெரிவித்த நிலையில் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் அவையை விட்டு சபாநாயகர் அப்பாவு வெளியேறினார். துணை சபாநாயகர் சபையை நடத்தினார். சட்டசபையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ். பேசுகையில், அவை தலைவர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை. ஆளுங்கட்சியின் எண்ணத்திற்கு ஏற்ப குறைந்த நாட்களே சபாநாயகர் அவையை நடத்தி உள்ளார். அ.தி.மு.க., சார்பாக கொடுக்கப்படும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை; அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தால் ‘போங்க… போங்க…’ என்று சபாநாயகர் கிண்டல் செய்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சபாநாயகர் மீதான தவறுகளை எடுத்துச் சொல்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. கடந்த கால சம்பவங்களுக்கும், அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்? நாங்களும் பேச ஆரம்பித்தால் அவையில் மீண்டும் கூச்சல் ஏற்படும். ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் அப்பாவு; பணிவானவர். அதே நேரத்தில் கண்டிப்பானவர். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அவையின் கட்டுக்கோப்பு போய் விடும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கண் ஜாடையாக கூட அப்பாவுவிடம் பேசியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சபாநாயகர் அப்பாவு ஜனநாயக கொள்கையில் நம்பிக்கை உடையவர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதும் பாசமும், பற்றும் உடையவர். அமளியில் ஈடுபடுபவர்களை அமைதிப்படுத்தவே சபாநாயகர் விரும்புவார். அவையில் இருந்து வெளியேற்ற விரும்ப மாட்டார். அ.தி.மு.க.,வின் உட்கட்சி பிரச்னையை திசைத்திருப்ப இந்த தீர்மானமா? இவ்வாறு அவர் பேசினார். வி.சி.க., காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து டிவிசன் அடிப்படையில் நடத்தப்பட்ட எண்ணி கணிக்கும் ஓட்டெடுப்பிலும் தோல்வி அடைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் குரல், டிவிஷன் என இருமுறைகளிலும் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு. இத்தீர்மானத்திற்கு 154 பேர் எதிர்ப்பும், 63 பேர் ஆதரவும் தெரிவித்திருந்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பா.ம.க. கலந்து கொள்ளவில்லை.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்