மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று( ஜூலை 28) காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஏற்கெனவே, திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எம்பிக்களாக பதவியேற்ற நிலையில் இன்று அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர். ஏற்கெனவே தம்பிதுரை, சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 5 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.