தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இழந்த ஆட்சியை எப்படியாவது மீண்டும் பிடித்து விட வேண்டும் என்று அதிமுக கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். தற்போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் வாக்காளர்களை கவர அதிமுக புதிய வியூகம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று( ஜன.28) முதல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து, விடியா திமுக ஆட்சிக்கு எதிராக, “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக பொது மக்களிடையே கொண்டு சேர்க்க உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும், தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வோம். விடியா திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்… என்று கூறியுள்ளார்.

Comments are closed.