Rock Fort Times
Online News

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை…- அதிமுக 3 -ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

ஜெயலலிதா பிறந்த நாளான இன்றைய தினம்(24-02-2026) சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 3-ம் கட்டமாக சில தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற திமுக அரசில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விஷம்போல ஏறியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்து விட்டது. மக்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தபிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும். 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும். மீன்பிடித் தடை காலங்களில் மீனவர்களுக்கு தற்போது ரூ. 8,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது அதிமுக ஆட்சி அமைத்த பிறகு ரூ.12,000 ஆக உயர்த்தப்படும். தைப்பொங்கலையொட்டி பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ.1,000 வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும். நகரப் பகுதிகளில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே அதிமுக சார்பில் இரண்டு கட்ட தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்