Rock Fort Times
Online News

கர்நாடக தேர்தலில் அதிமுக தனித்து போட்டி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் டி.அன்பரசன் போட்டியிடுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துகிறது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 10.5.2023 அன்று நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக  கர்நாடக மாநில கழக அவைத் தலைவர் டி.அன்பரசன் தேர்ந்தெடுத்து நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 16 ஆம் தேதி, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும் விவாதிப்பதற்காக அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏற்கெனவே கர்நாடக மாநில தேர்தல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை டெல்லியில் தம்பிதுரை எம்.பி சந்தித்து பேசிய விவரத்தை தொிவித்தாா். கூட்டணி அமைத்து போட்டியிடுவதை அம்மாநில பாஜக ஏற்காவிட்டால் தனித்து களம் காண்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், கட்சி செயற்குழு உறுப்பினர்களான மாநில தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று (19.04.2023 ) கர்நாடக தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள அதிமுக வேட்பாளரையும் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் பாஜக சார்பில் முரளி என்பவரும், ஆம் ஆத்மி சார்பில் சுரேஷ் ரத்தோட் என்பவரும் களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்