தமிழ்நாடு சட்டசபையில் இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூட்டம் தொடங்கியது. கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீண்ட விளக்கம் அவையில் கொடுத்துள்ளேன் என சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கின்ற இருக்கையை, மரபு அடிப்படையில், பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி விளக்கம் அளித்த போதும் அதனை ஏற்காமல், அதிமுக உறுப்பினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எதிர்கட்சியினர் எம்எல்ஏக்கள் பேசுவது நேரலையில் வருவதில்லை என்றும் அமைச்சர்கள் பேசுவது மட்டும் நேரலையில் வருவதாகவும் குற்றம் சாட்டினார். எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நான் பேசுவதும் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் பேசுவதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.