Rock Fort Times
Online News

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தி.மு.க.வில் ஐக்கியம்…!

சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை அக்கட்சியில் இருந்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்.
2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தித்தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார். இந்தநிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று( ஆகஸ்ட் 13) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர். அண்மையில் அதிமுக முன்னாள் எம்பி அன்வர்ராஜா திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்