Rock Fort Times
Online News

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்…- பாஜகவுடன் கூட்டணி குறித்து விளக்கம் அளிக்கிறார் இபிஎஸ்…!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும். அந்த வகையில் மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த கூட்டத்தில், பாஜகவுடன் மீண்டும் அதிமுக ஏன் கூட்டணி வைத்தது என்பது குறித்து செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.
இருப்பினும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டாமல் பாஜக கூட்டணி குறித்து அறிவித்ததால் நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்