திருச்சி மாநகராட்சியின் 2025-2026ம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை மேயர் மு.அன்பழகனிடம், நிதிகுழு தலைவர் முத்துசெல்வம் இன்று (மார்ச் 26) தாக்கல் செய்தார். அப்போது மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன் மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். பின்னர், நிலுவையில் உள்ள வரி இனங்களை விரைவாக வசூலிக்கவும், மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, சி.அரவிந்தன், அனுசியா ரவிசங்கர் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி வருவாய் அனைத்தும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு செலவிடப்படுகிறது, திருச்சி மாநகரில் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் பாலங்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரி கட்ட இயலாத மக்களை மிரட்டி வரிக்கு வட்டி மேல் வட்டி போட்டு வசூலிக்கப்படுகிறது. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர்.

Comments are closed.