ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனு செய்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி திமுகவில் இணைந்தார்…!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். இதனால், அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 58 பேர், 65 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில், தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர். கடந்த 18-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். இந்த சூழலில் நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இந்தநிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில் அதிமுக நிர்வாகி செந்தில் முருகன் என்பவர் கடந்த 17-ம் தேதி சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார். அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக செந்தில் முருகனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கினார். வேட்பு மனு தாக்கல் திரும்ப பெற நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று(21-01-2025) தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் இணைந்த செந்தில் முருகன் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.
Comments are closed.