Rock Fort Times
Online News

நடிகர் விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்- சொல்கிறார், பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன்…!

தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். திமுக வினருக்கு அடிப்படை எதுவும் புரிவதில்லை. விஸ்வகர்மா இல்லையென்றால் உலகில் எதுவும் இல்லை. தொழில் இல்லை என்றால் உலகமே இயங்காது. விஸ்வகர்மா திட்டத்தை ஜாதியுடன் தொடர்புபடுத்தி அதனை கொச்சைப்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர். 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் அமல்படுத்தும் முதல் திட்டமாக விஸ்வகர்மா திட்டம் இருக்கும். இந்தியாவில் தேர்தல் செல்வாக்கை நிரூபித்துள்ள கட்சி பாஜக. அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு தற்பொழுது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பேன் என விஜய் பேசுவது கேலியாக உள்ளது. ” ஐ அம் வெயிட்டிங்” என நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தில் கூறுவார். அவர் முதலமைச்சர் ஆவதற்கு இன்னும் 50 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும். ” ஹி வில் பி வெயிட்டிங்’. மும்மொழி கொள்கை என்றால் இந்தி என திமுக தவறாக பிரச்சாரம் செய்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் முதலமைச்சருக்கு என்ன ஆட்சேபனை உள்ளது. மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் தேசிய கல்விக் கொள்கை. தேசிய கல்விக் கொள்கை என்பது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பது அல்ல. தமிழை மற்ற மாநிலங்களில் திணிப்பதுதான். நான் முதலமைச்சராக இருந்தால் உத்தரபிரதேச முதல்வரை சந்தித்து அங்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க சொல்வேன். விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அந்த சமூக மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதை செய்ய திமுக முதல்வருக்கு தைரியம் கிடையாது. 2026 இல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த கோரிக்கையை நிறைவேற்ற பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்