Rock Fort Times
Online News

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நடிகர் சரத்குமார் திடீர் சந்திப்பு…!

தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், ஆளும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க.- பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட உள்ளன. இதேபோன்று, நாம் தமிழர், த.வெ.க. ஆகிய இரு கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதனால், இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தி.மு.க. சார்பாக, ஓரணியில் தமிழகம் என்ற முழக்கத்துடன் மக்களை நேரிடையாக சந்தித்து, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. சார்பாக, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கட்சியின் முன்னிலை, கள நிலவரம், அரசியல் பணிகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொண்டார். கூட்டணி ஒருங்கிணைப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நடிகர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகியான சரத்குமார் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சரத்குமாருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், அவருக்கு இதுவரை பொறுப்பு வழங்கப்படவில்லை. இந்த சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் சென்று சரத்குமார் சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிட சரத்குமார் திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்