Rock Fort Times
Online News

அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை- தலைமைச் செயலாளர் எச்சரிக்கை…!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். மேலும் நாளை (பிப்ரவரி 15) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில்,
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில், 01.07.2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும் நாளிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 2016, 2017 மற்றும் 2019ல் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தக் காலங்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலங்கள் பணிக்காலமாக வரன்முறை செய்து ஆணையிடப்பட்டது. ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021-22-ம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23-ம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்திற்கு சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது. நிலுவையிலுள்ள விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 65,075 ஓய்வூதியர்களின் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். மேலும், அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 27,858 பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மேலும் 10,000 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அத்துடன் விரைவில் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும். எனவே, அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பிப்.15-ம் தேதி (நாளை) அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்