Rock Fort Times
Online News

தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ, பிரச்சனையோ உண்டாக்கினால் அது யாராக இருந்தாலும் நடவடிக்கை…* மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஆளுங்கட்சியான திமுக, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து இன்று( மார்ச் 16) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23க்கு இன்னமும் 39 நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் பணியில் நம் கழகம் தான் நம்பர் ஒன் ஆக இருந்து வருகிறது. அரசியல் களத்தில் நமது கையே ஓங்கி இருக்கிறது. அதேபோல கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நினைத்தவர்களின் சதியை முறியடித்து, புதிய கட்சிகளை அரவணைத்து மிக பலமான கூட்டணியை கட்டியிருக்கிறோம். கவனமாக இருக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு அசைவும், பேச்சும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். நாம் உழைத்த உழைப்பை அறுவடை செய்யும் காலம் இது. இனி வரும் நாட்கள் ரிலே ஓட்டப்பந்தயத்தில் வெற்றிக் கோட்டை அடைவதற்கு ஓடுவது போலத்தான். நம்மில் ஒருவர் கூட சுணங்கிவிடக் கூடாது. இதுவரை போட்ட உழைப்பை விட இரண்டு மடங்கு உழைப்பை அளித்து, கழகத்தின் வெற்றியை அறுவடை செய்ய வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவரின் தோளிலும் உள்ளது. இந்த நேரத்தில் தான் நாம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். கழகம் வென்றது என்ற செய்தி நம் காதில் எட்டும் வரை களத்தில் நின்று உழைக்க வேண்டும். தேர்தலில் நாம் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 200 தொகுதிகள் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்றுங்கள். தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்சனையும் இருக்க கூடாது. தனிப்பட்ட மனஸ்தாபங்கள் கழகத்தின் வெற்றியை பாதிப்பதை எப்போதும் அனுமதிக்க முடியாது. யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ, பிரச்சனையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால் அவர் எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாய் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்