ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை- * 68 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமரிடம் வழங்கினார் துரை வைகோ எம்பி!
ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வழங்கினார். அக்கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர் சரவணன் மட்டுமல்ல, அதிகாரப்பூர்வமாக 126 இந்தியர்களை ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்க வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடிச் சென்று இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களை போருக்கு அனுப்புவது, இந்தியா-ரஷ்யா இடையேயான வெளியுறவுத்துறை ஒப்பந்தங்களுக்கு எதிரானது. இவ்வாறு இந்தியர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளித்து போருக்கு அனுப்புவது முற்றிலும் தவறான செயல் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர், ரஷ்யாவில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவை மேலும் துரிதப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்ததாக துரை வைகோ எம்பி கூறினார்.
Comments are closed.