சட்ட திட்டங்களை மதிக்காத கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் விக்கிரமராஜா…!
தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் சார்பில் 42- வது வணிகர் தினத்தை முன்னிட்டு, சென்னை மதுராந்தகத்தில் வணிகர் சங்க மாநாடு மே 5-ம் தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று(11-03-2025) நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், மே 5ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக சென்னை மதுராந்தகத்தில் வணிகர் அதிகார பிரகடன மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து 7 லட்சம் வணிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். திருச்சி மாவட்டத்திலிருந்து
1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். ஜிஎஸ்டி , கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஆகவே, சாமானிய வணிகர்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம். தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் 27 சதவீத வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ஆன்லைன் வர்த்தகம் மேற்கொள்பவர்களுக்கும் சட்டங்கள் உள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்த சட்டத்தை முறையாக பின்பற்றுவதில்லை. குறிப்பாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் மொத்த வியாபாரம் மட்டுமே செய்ய வேண்டும், அவை நகரங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் என்பன போன்ற சட்டங்கள் உள்ளது. ஆனால் அவற்றை எதையும் பின்பற்றாமல் மாநகரத்துக்குள்ளேயே அந்த நிறுவனங்கள் செயல்பட்டு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரங்களை செய்து வருகிறது. அதனை தடுத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசால் வணிக நல வாரியம் தொடங்கப்பட்டது. ஆனால் அது செயல்படாமல் உள்ளது. அதனை செயல்படுத்தி சாமானிய வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சாலையோர கடைகள் அமைக்க தனி இடம் அமைத்து தர வேண்டும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக எங்களின் ஆட்சி மன்ற குழு கூடி எங்கள் கோரிக்கைகள் குறித்து விவாதித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொடுப்போம். எந்த அரசியல் கட்சி எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக கூறுகிறார்களோ அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிப்போம். தமிழக பட்ஜெட் தொடர்பாக வணிகர்கள் கோரிக்கைகளை முதலமைச்சரை சந்தித்து வழங்க உள்ளோம். எங்களின் கோரிக்கைகள்
பட்ஜெட்டில் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் என்றார். பேட்டியின்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.