Rock Fort Times
Online News

பள்ளிகளில் ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய அதிரடி உத்தரவு…!

பள்ளிகளில் ஜாதி பாகுபாட்டுடன் செயல்படும் ஆசிரியர்களை உடனடியாக இடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவர்கள்
இடையே ஜாதி மோதல் ஏற்படுவதை தடுத்து, அவர்கள் ஒற்றுமையாக பழகி, படிக்க வழி செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு, கடந்த ஜூன் 18ல் அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், பள்ளிகளில் ஜாதி மற்றும் வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடம் உண்டாக்கி பிரிவினையை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் குறித்து புகார் வந்தால் அவர்களை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை வாயிலாக மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க விபரங்கள் தேவை என்றால் மாணவர்களை தனியாக, தலைமை ஆசிரியர் அலுவலகத்துக்கு அழைத்து பேச வேண்டும். இந்த தகவல்களை பொதுவெளியில் பகிரக்கூடாது. மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரக்கூடாது. இது குறித்து, அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மாணவர்களுக்கான தொந்தரவுகள், பிரச்சனைகள் குறித்து, அவர்கள் வெளிப்படையாக புகார் அளிக்க, பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி வைக்க வேண்டும். அதை வாரம் ஒரு முறை தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, புகார்களை ஆலோசனைக் குழு வாயிலாக விசாரித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்