கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை…!
பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை...
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டது. அரசு பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24-ந் தேதியுடன் மூடப்பட்டன. வெயிலில் சிறுவர்கள் செல்லாமல் வீடுகளுக்குள் இருக்குமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்து எடுப்பதால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தக்கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

ஆனாலும், ஒரு சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.
அந்த புகாரின் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு கட்டாயமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதனை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் அந்தப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி ஆகியோர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Comments are closed.