அதிகளவு மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை…
ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு...
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் இன்று ( 08.07.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கூடுதல் அரசுச் செயலர் பிரதீப் யாதவ், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, எம்.எல்.ஏ.க்கள் அப்துல்சமது, சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் பேசியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு 2,227 விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் ஏற்பட்ட விபத்துகள் 1,208. இதில், திருச்சி மாநகரத்தில் 150 பேரும், மாவட்டத்தில் 540 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களை தவிர எந்த வாகனத்திலும் செல்லாத 118 பாதசாரிகளும் உயிரிழந்து உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் விபத்துகள் அடிக்கடி நடக்கும் ‘ஹாட் ஸ்பாட்டுகள்’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
மொபைல் போன் பேசிக் கொண்டே செல்பவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவு மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து படிக்கட்டில் யாரும் பயணிக்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடுவதால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மாட்டை பிடித்து ஒரு முறைக்கு இரு முறை அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.