திருச்சி ஜி கார்னர் அருகே விபத்து: சாலையில் வேகமாக சென்ற கார் மோதியதில் தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு ஏறி நின்ற அரசு பேருந்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி- சென்னை பைபாஸ் சாலை எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் சாலையாகும். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன. இந்நிலையில் மதுரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருச்சி வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை மதுரையை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த அரசு பேருந்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஜி கார்னர் பகுதியில் சென்ற போது பேருந்துக்கு பின்னால் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. இதில் கார் நிலை தடுமாறி சாலையின் நடுப்பகுதி தடுப்பு சுவரில் ஏறி நின்றது. மேலும் அரசு பேருந்தும் சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு நின்றது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். இதில் ஒரு சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் எந்திரம் மூலம் விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் மாற்று பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments are closed.