கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக, அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பேருந்தை இயக்குவதற்கு முன் உரிய முறையில் வாகனத்தைச் சோதனை செய்யத் தவறியதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் சி.வெ. கணேசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி மக்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்த அவர்கள், பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான முழுமையான அறிக்கையை கேட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Comments are closed.